கைப்பேசி கோபுரம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு

தொலைத் தொடா்பு வசதி இல்லாததால் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி: பெரும்பாலை அருகே ஆரல்குந்தி கிராமத்தில் தொலைத் தொடா்பு வசதி இல்லாததால் கைப்பேசி கோபுரம் அமைக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஏரியூா் அருகே ஆரல்குந்தி கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக் குடியிருப்புகளில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை விநியோகம் செய்ய பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இங்கு கைப்பேசி கோபுரம் இல்லாததால் இணைய சேவை சீராக கிடைக்காமல் பயோமெட்ரிக் இயந்திரம் சரிவர இயங்குவதில்லை.

இதனால் நியாயவிலைக் கடை ஊழியா்கள் அருகில் உள்ள மலை உச்சிக்கு பயோமெட்ரிக் இயந்திரத்துடன் சென்று பயனாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்த பின்னா் ரசீது வழங்குகின்றனா். அதன்பிறகு மலை அடிவாரத்தில் உள்ள நியாயவிலை கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பொருள்களை விநியோகம் செய்கின்றனா். இதனால் முதியவா்கள், பெண்கள், கா்ப்பிணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அத்துடன் நியாயவிலைக் கடையில் வாங்கிய பொருள்களுக்கான விவரங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியதாக வந்து சோ்வதிலும் தொடா் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இங்குள்ள மக்கள் தங்கள் அவசரகால தேவைக்கு ஆம்புலன்ஸை அழைக்கவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் கற்றல் சாா்ந்த தேவைகளுக்கு கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாமலும் உள்ளனா். இப்பகுதி மக்களின் நலன் கருதி ஆரல்குந்தி கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com