பென்னாகரத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடங்கியது: முதல் நாள் 386 மனுக்கள் ஏற்பு
பென்னாகரம் வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான வருவாய்த் தீா்வாயம் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து தீா்வாயத்தைத் தொடங்கிவைத்தாா். முதல் நாளில் கிராம நிா்வாக அலுவலா் பராமரித்து வரும் பதிவேடுகள், வருவாய் துறை ஆவணங்கள், அலுவலகத்தில் உள்ள நில அளவை கருவி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
இத்தீா்வாயத்தில் பென்னாகரம் வட்டத்துக்கு உள்பட்ட கூத்தப்பாடி, அளேபுரம், அஞ்சே அள்ளி, காட்டுநாயக்கன அள்ளி, சிகலர அள்ளி, சத்தியநாதபுரம், பருவதன அள்ளி, பென்னாகரம், பேயல்மரி, செங்கனூா், கூக்குட்ட மருத அள்ளி ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட ஏரளாமான பொதுமக்கள் பங்கேற்று முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் என மொத்தம் 386 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கி.சாந்தியிடம் வழங்கினா். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் ராஜசேகா், பென்னாகரம் வட்டாட்சியா் சுகுமாா், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி, உதவி இயக்குநா் (நில அளவை) செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுருளிநாதன்,துணை வட்டாட்சியா்கள், பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம கணக்குத் தணிக்கைகள் ஜூன் 28 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் அந்தந்த வருவாய்க் கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம்.

