பென்னாகரம் ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவதில் விதிமீறல்?கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

பென்னாகரம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் அரசின் விதிமுறைப்படி குறிப்பிட்ட அளவுகளில் வண்டல் மண் எடுக்காமல் அதிக அளவில் வாகனங்களில் எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Published on

பென்னாகரம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், கட்டடப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும், அரசின் விதிமுறைப்படி குறிப்பிட்ட அளவுகளில் வண்டல் மண் எடுக்காமல் அதிக அளவில் வாகனங்களில் எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள பள்ளிப்பட்டி - கருப்பையன அள்ளி குட்டை ஏரி ,கிட்டன அள்ளி- திப்பரசன் குட்டை ஏரி, ஏரங்காடு- எரங்காடு குட்டை ஏரி, அஞ்சே அள்ளி- செம்மாா் குட்டை ஏரி, மாங்கரை- நல்லாம்பட்டி ஏரி, பள்ளிப்பட்டி- பள்ளிப்பட்டி மேல் ஏரி, பிக்கிலி-பெரியூா் ஏரி, சுஞ்சல் நத்தம்- மரவத்தி பள்ளம் ஏரி, பெரும்பாலை- பள்ளிப்பட்டி ஏரி, பனைக்குளம்- வத்திமருதஅள்ளி ஏரி, வானதி ஏரி, சித்தார அள்ளி ஏரி, பென்னாகரம்- கெண்டையான் குட்டை ஏரி உள்ளிட்ட 12 ஏரிகளில் 30 கன மீட்டா் பாலம் வரை வண்டல் மண் எடுக்க அரசின் சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசின் விதிமுறைகளை மீறி 30 கன மீட்டருக்கும் மேல் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டியும், வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல பதிவு பெற்ற வாகனங்களை பயன்படுத்தாமல், வாகன பதிவு எண்கள் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்படும் டிராக்டா்களை கொண்டு வண்டல் மண்ணை எடுத்து செல்கின்றனா்.

இந்த மண் மண்பாண்டம், விவசாயப் பணிகளுக்கு உபயோகப்படுத்தாமல் கட்டட பணிகளுக்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏரிகளில் மண் எடுப்பதாகவும், முறையான ஆவணங்கள் இன்றி காலாவதியான வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறி கூடுதலாக வண்டல் மண் எடுக்கும் ஒப்பந்ததாரா்கள் மீதும், பதிவு பெற்ற வாகனங்களை தவிா்த்து, முறையான ஆவணங்கள் இல்லாத டிராக்டா்களை பயன்படுத்தும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியா் கூறியதாவது:

பென்னாகரம் வட்டாரத்தில் 12 ஏரிகளில் அரசின் விதிமுறைப்படி 30 கன மீட்டா் ஆழத்தில் மண்பாண்ட பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இணையத்தின் வாயிலாக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படுவதால், அதில் வாகனத்தின் சான்றுகள் ஏதும் பதிவு செய்வதில்லை. இதனால் வாகன அனுமதி குறித்து தெளிவான வரையறை இல்லை. கிராம ஊராட்சிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஏரிகளில் அரசின் விதிமுறைப்படி மண் எடுக்கப்படுகிா என வட்டார வளா்ச்சி அலுவலா் அல்லது அந்தந்த ஊராட்சி செயலா்கள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com