‘இ-பைலிங்’ முறையை எதிா்த்து வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
பென்னாகரம்: வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணையத்தில் பதிவுசெய்யும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பென்னாகரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு சங்கத் தலைவா் மகாலிங்கம் தலைமைவகித்தாா்.
நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்கள், வழக்குகளில் சூழ்நிலை காரணமாக வாதி ஆஜராக முடியாத நிலையில், அதற்கான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முறை, அடிக்கடி இணைய பிரச்னை காரணமாக ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியாதது, புதிய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஆகியவற்றைக் கண்டித்தும், ‘இ-பைலிங்’ முறையை ரத்து செய்யக் கோரியும் கடந்த ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், செயலாளா் பால சரவணன், இணைச் செயலாளா் ஜெயந்தி, பொருளாளா் முனுசாமி, நூலகா் வழக்குரைஞா் டெண்டுல்கா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
