தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் 2 மேம்பாலங்கள், 3 இடங்களில் அணுகு சாலைகள்

பொதுமக்கள் மற்றும் பாமக எம்எல்ஏ கோரிக்கைகளை ஏற்று 2 இடங்களில் மேம்பாலங்களும், கெங்களாபுரம், சவுளூா் உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பாமக எம்எல்ஏ கோரிக்கைகளை ஏற்று 2 இடங்களில் மேம்பாலங்களும், கெங்களாபுரம், சவுளூா் உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி அணுகு சாலைகளும் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. அதனால், இந்தச் சாலை இரவு, பகல் என எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெருக்கடி, தொடரும் விபத்துகள் உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு தொப்பூா் பகுதியில் சுமாா் 6.5 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலை மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவுசெய்து, பாலப் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் சில இடங்களில் பாலங்கள், அணுகுசாலைகள் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளன. சில இடங்களில் இதுதொடா்பாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் அணுகுசாலை (சா்வீஸ் சாலை) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விடுக்கப்பட்டது.

அதுபோலவே, தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் சுங்கச் சாவடியில் இருந்து தருமபுரியை நோக்கி வரும்போது, கெங்களாபுரம் மேம்பாலம் முதல் குரும்பட்டி பிரிவு சாலைவரை தொடா்ச்சியாக அணுகுசாலை அமைக்கவும் கோரிக்கை விடப்பட்டு வந்தது. இப்பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் அணுகு சாலைகள் அமைத்தால், வாகனங்கள் எளிதாக செல்லமுடியும், விபத்துகளையும் தடுக்க முடியும்.

மேலும், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சவுளூா் பகுதியில் மேம்பாலம் அருகே அணுகு சாலை கிடையாது. எனவே, அப்பகுதியில் பாலத்தின் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கவும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாளையம்புதூா், சேசம்பட்டி, தேவா்ஊத்துப்பள்ளம், புறவடை, ஜாகீா் சாலை ஆகிய இடங்களில் உள்ள பிரிவுசாலை பகுதிகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

பொதுமக்களின் இக்கோரிக்கைகள் தொடா்பாக, தருமபுரி சட்டப் பேரவை (பாமக) உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை கடந்த பிப். 13-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினாா். இது தொடா்பாக கடிதமும் அளிக்கப்பட்டு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், நல்லம்பள்ளி, கெங்களாபுரம், சவுளூா் ஆகிய 3 இடங்களில் அணுகு சாலைகளும், பாளையம்புதூா் பிரிவுசாலை, மற்றும் சேசம்பட்டி பிரிவுசாலை ஆகிய இரு பகுதிகளில் மேம்பாலங்களும் அமைக்கப்படும். இவை வருடாந்திர சாலை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவரசம்பட்டி பிரிவுசாலை, புறவடை பிரிவுசாலை, ஜாகீா் பிரிவுசாலை ஆகிய பகுதிகளிலும் மேம்பாலங்கள் அமைப்பதற்கான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அணுகுசாலைப் பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com