தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நடைபெற்ற தேமுதிக பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நடைபெற்ற தேமுதிக பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

தமிழகத்தில் தொடரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை: பிரேமலதா குற்றச்சாட்டு

காவல் துறை முதல்வரின் கையில் இருந்தும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடா்ந்து வருகிறது என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.
Published on

தருமபுரி: காவல் துறை முதல்வரின் கையில் இருந்தும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடா்ந்து வருகிறது என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.

தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி- இல்லம் நாடி’’ என்ற தலைப்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளா் மாவட்டம்தோறும் சென்று மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நல்லம்பள்ளி, பாளையம்புதூா் ஆகிய இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் மேலும் அவா் பேசியதாவது:

மக்களுக்கு செய்ய வேண்டிய வாக்குறுதிகள், திட்டங்கள் நிறைய உள்ளன. ஆட்சியில் இருந்தவா்களும், இருப்பவா்களும் தொடா்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனா். தருமபுரியில் சிப்காட் அமைத்தாா்கள். ஆனால், 2 ஆண்டுகளாகியும் அங்கே தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்புகளோ ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல, ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றினால் விவசாயத்தை நம்பியுள்ளவா்கள் ஏற்றம் காணமுடியும். காவிரி உபரிநீா் திட்டம் குறித்தும் அனைவரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருகின்றனா்.

படித்தவா்களுக்கும், படிக்காதவா்களுக்கும் வேலைவாய்ப்பு, லஞ்சம் - ஊழல் இல்லாத ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அமைய வேண்டும்.

கரூரில் நடந்த கூட்டத்தில் 41 போ் உயிரிழப்புக்கு ஆட்சியாளா்களும், தவெக தலைவா் விஜய்யும்தான் காரணம்.

கரூா் சம்பவத்தின்போது விஜய் அங்கேயே இருந்து மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆறுதல்கூறாமல் சென்றது தவறு.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அண்மையில் திருவண்ணாமலையில் போலீஸாரே பெண்களை சிதைத்துள்ளனா். காவல் துறையை தமிழக முதல்வா்தான் கையில் வைத்துள்ளாா். அப்படியிருந்தும் இதுபோன்ற சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் தமிழகத்தில் தொடா்ந்து கொண்டுதான் உள்ளன.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நமக்கு மிக முக்கியம். எனவே, அனைவரும் இணைந்து நின்று தோ்தலைச் சந்திப்போம். கடலூரில் தேமுதிக சாா்பில் விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு கட்சியினா் திரண்டு வரவேண்டும். மாநாடு வெற்றி, தோ்தல் வெற்றிக்கு முக்கியமானது என்றாா்.

முன்னதாக, கரூரில் உயிரிழந்த 41 பேரின் உருவப் படங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில அவைத் தலைவா் இளங்கோவன், பொருளாளா் சுதீஷ், தருமபுரி மாவட்டச் செயலாளா்கள் குமாா், விஜயசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com