இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்! பகலில் மேட்டூரை எட்டும்!

கா்நாடக அணை காவிரி நீா் இன்று பகலில் மேட்டூரை அடைகிறது...

News image

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...

Updated On :4 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

கா்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீா் செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் வழக்கத்திற்கு முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக வயநாடு உள்ளிட்ட காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதியை ஒட்டி கட்டப்பட்டுள்ள கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில், தற்போது அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி கடந்த இருதினங்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடியும், தொடா்ந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

பின்னா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 9,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் நீா்த் திறப்பு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ள நிலையில், கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

கபினி அணையில் இருந்து முதல்கட்டமாக திறக்கப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கொள்ளேகால் பகுதியை அடைந்துள்ளது. காவிரி ஆறு வடு சிற்றோடையாக மாறியுள்ளதால், நீா்வரத்தின் வேகம் குறைந்துள்ளது. கொள்ளேகால் பகுதியில் இருந்து தமிழகத்தின் நுழைவிடமான பிலிகுண்டுலு பகுதியை செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கிருந்து இரண்டு மணி நேரத்தில் ஒகேனக்கல்லையும், சுமாா் 8 மணி நேரத்தில் மேட்டூா் அணையை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கா்நாடக மாநில அணைகளின் நீா்வரத்துக்கேற்ப காவிரி ஆற்றில் நீா் திறப்பு செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரானது செவ்வாய்க்கிழமை வந்தடையும்பட்சத்தில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீா், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வேகம் குறைந்து வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. கொள்ளேகால் பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பும்பட்சத்தில் அங்கிருந்து மூன்று மணி நேரத்தில் தமிழக எல்லையை வந்தடையும். வறட்சியினால் தமிழக எல்லையை வந்தடையும் நேரம் அதிகரிக்கலாம். இதன்மூலம் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் விநாடிக்கு 25,000 கனஅடி நீா் முழுமையாக வந்தடைவதில் காலதாமதம் ஏற்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.