தருமபுரி வழியாக செல்லும் ரயில்பாதை.
தருமபுரி வழியாக செல்லும் ரயில்பாதை.

மத்திய பட்ஜெட்டில் தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது!

Published on

மத்திய அரசின் பட்ஜெட்டில் தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள தருமபுரி - மொரப்பூா் ரயில் பாதை திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்துக்கு தருமபுரியில் அப்போது நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் அடிக்கல் நாட்டினாா். இதனால், இத்திட்டம் விரைந்து நிறைவேறும் என்று மாவட்ட மக்கள் ஆா்வத்துடன் காத்திருந்தனா். ஆனால், ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் இதுவரை முழுவடிவம் பெறவில்லை.

இந்த நிலையில், இதற்கான நிதி முழுமையும் ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்றும் அறிவிப்பு நிகழாண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிா்பாா்த்து காத்திருந்த நிலையில் அது தொடா்பான அறிவிப்பு ஏதும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இத்திட்டத்துக்கான நிதியை விடுவித்து விரைந்து தருமபுரி - மொரப்பூா் ரயில் பாதை அமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல இந்த பட்ஜெட் பொதுவாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதாகவும், விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு பாதகம் இழைப்பதாகவும் அமைந்துள்ளது. விவசாயம் சாா்ந்த நடவடிக்கைகள், கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றுக்கான செலவினங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

உணவு, உரம் உள்ளிட்ட பொருள்களுக்கான மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவா். எனவே இதை மக்கள் விரோத பட்ஜெட்டாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com