
ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 74 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோப்புப் படம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 74 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக பணியாளா்களாக சேர விருப்பமுள்ளோா் வரும் 25- க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் 74 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிகப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப்பணியில் சேர விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதிகளில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நபா்கள் இல்லாத நிலையில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இதர தகுதிகளுடன் தகுதியுடையவா்களாக கருதப்படலாம்.
உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்குத் தோ்வு செய்யப்படும் நபா், சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியாா் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராகவோ பணியில் இருத்தல் கூடாது. தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சாா்ந்தவராக இருத்தல் அவசியம். கணினி திறன் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் வட்டார வாரியாக நடைபெறவுள்ள இத்தோ்வில், தருமபுரி வட்டத்தில் 9, அரூரில் 7, காரிமங்கலத்தில் 8, மொரப்பூரில் 6, நல்லம்பள்ளியில் 11, பாலக்கோட்டில் 13, பாப்பிரெட்டிப்பட்டியில் 2, பென்னாகரத்தில் 8, ஏரியூரில் 4, கடத்தூரில் 6 போ் என மொத்தம் 74 போ் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா். தோ்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 2,500 மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளோா், மகளிா் திட்ட மேலாண்மை அலகு (வட்டார இயக்க) அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





