ஒசூர் மாநகராட்சியாக செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.  
Updated on
2 min read

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.  
ஒசூர்  பேரூராட்சியாக இருந்தபோது மக்கள்தொகை வெறும் 2 ஆயிரம் மட்டுமே.  அதற்குப் பிறகு அப்பாவுப் பிள்ளை ஒசூர் பேரூராட்சித் தலைவராக இருந்தபோது  15.1.1992-இல் இரண்டாம் நிலை நகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டது.  ஒசூரில் 2 சிப்காட்டுகள் உருவாக்கப்பட்டன.  முதல் சிப்காட்டில் அசோக் லேலண்ட்,  இந்துஸ்தான் லீவர்,  டைட்டான்,  ஜி.ஆர்.பி. நெய் போன்ற 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும்,   2- ஆவது சிப்காட் பகுதியில் அசோக் லேலண்ட்  இரண்டாவது யூனிட்,  நெரோலேக் பெயின்ட் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளும், சுமார் 2,500 சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.   இதையடுத்து, 22.05.1998 இல் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து,  25.06.2012 இல் மத்திகிரி பேரூராட்சி,   சூசூவாடி,   மூக்கண்டப்பள்ளி,  ஆவலப்பள்ளி,  சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகளை ஒசூர் நகராட்சியுன் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 
இந்த நிலையில்,  கிருஷ்ணகிரியில் 23.9.2017-இல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆ. நூற்றாண்டு விழாவில்,  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார்.  அப்போது  ஒசூர் சிறப்பு நிலை நகராட்சியுடன் கொத்தகொண்டப்பள்ளி,  தொரப்பள்ளி,   நல்லூர்,  பேரண்டப்பள்ளி,  அச்செட்டிப்பள்ளி உள்ளிட்ட மேலும் 8  ஊராட்சிகளை இணைத்து ஒசூரை மாநகராட்சியாக உயர்த்தி அறிவித்தார். 
இதனைத் தொடர்ந்து,  இந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி,  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மாவட்ட ஆட்சியரும் சென்னை நகராட்சிகள் நிர்வாக அலுவலகத்துக்கு ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட முதல்வரின் அறிவிப்புக்கு அரசு ஆணை வெளியிட கருத்துரு அனுப்பியுள்ளார்.  
 தற்போது,  ஒசூர் நகராட்சியின் சுற்றளவு 180 சதுர கிலோ மீட்டர்.  ஒசூர் நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1991-இல் 2 ஆயிரமாகவும்,   2001-இல் 85 ஆயிரமாகவும் இருந்தது. 2011-இல் 2 லட்சமாக உயர்ந்துவிட்டது.  பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஒசூரில் உள்ள தொழில்சாலைகளில் வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,  தற்போது மக்கள்தொகை 4 லட்சமாக உயர்ந்துள்ளது.  ஒசூர் பேருந்து நிலையத்துக்கு மட்டும் தினமும் சுமார் 1.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். 
ஒசூர் நகராட்சியாக இருந்துபோது 25 வார்டுகள் இருந்தன.  தற்போது 45 வார்டுகளாக உயர்ந்துள்ளன.  இது மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளதால்,  80 வார்டுகளாக உயர்த்தப்படுகிறது. 
ஒசூர் உலக வங்கி நிதியுதவியுடன் மாதிரி நகரமாகவும்,  மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.  இந்த நிலையில், ஒசூரை முதல்வர் அறிவித்தபடி,  மாநகராட்சிக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது குறித்து முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா கூறியது:   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஒசூரை மாநகராட்சியாக அறிவித்தார்.  ஆனால் அதுதொடர்பாக எந்தவித பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.  வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்கவும்,  வார்டுகளை பிரிக்கவும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார். 
இது குறித்து ஹோஸ்டியா சங்கத் தலைவர் வெற்றி.ஞானசேகரன் கூறியது:  தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் நகராட்சியாக ஒசூர் உள்ளது. ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.  ஒசூரை விரைந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தி அதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புப் பணிகளும், மாநகராட்சிக்குத் தேவையான கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்   என்றார். 
ஒசூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் கூறியது:  ஒசூரை மாநகராட்சியாக உயர்த்தத் தேவையான  பணிகள் முடிந்துவிட்டன. சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் இருந்து அரசாணை வரவேண்டியதுதான் பாக்கி.  விரைவில் ஒசூரை மாநகராட்சியாக அறிவித்து அரசாணை வெளியிடப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com