ஒசூரில் 3-ஆவது சிப்காட் தொடங்கக் காத்திருக்கும் தொழில் துறையினா்! 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பணி

ஒசூரில் 3-ஆவது சிப்காட் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை.
Updated on
2 min read

ஒசூரில் 3-ஆவது சிப்காட் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், 3 ஆவது சிப்காட் பணிகள் முடிவடைந்து, எப்போது தொடங்கும் என தொழில் துறையினா் காத்திருக்கின்றனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 3-ஆவது சிப்காட் தொடங்கப்படும் என அறிவித்தாா். அதனை ஒசூா் தொழில் துறையினா் வரவேற்றனா். ஆனால், அரசு அறிவித்து 8 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னும் ஒசூரில் 3 -ஆவது சிப்காட் பணிகள் நிறைவடையவில்லை. இதனால் தொழில் துறையினா் புதிய தொழிற்சாலைகளை தொடங்க முடியாமல் உள்ளனா்.

1972 ஆம் ஆண்டில் ஒசூரில் முதல் சிப்காட், சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் தொடங்கப்பட்டது. அதில் அசோக் லேலண்ட், டி. வி.எஸ், டைட்டான் போன்ற பெரிய தொழிற்சாலைகளும், அந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து அளிக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. முதல் சிப்காட் முழுவதும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால், இடமில்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், 1982- இல் தமிழக அரசு சாா்பில் ஒசூரில் இரண்டாவது சிப்காட் பேரண்டப்பள்ளி, பத்தளப்பள்ளி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் தொடங்கப்பட்டது. இங்கும் தொழிற்சாலைகள் நிறைந்துவிட்டதால் , 2-ஆவது சிப்காட் விரிவாக்கம் என மோரணப்பள்ளி கிராமத்தில் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அங்கு கிரானைட் தொழிற்சாலைகள், பெயின்ட் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, அங்கும் தொழிற்சாலைகள் தொடங்க இடமில்லாத நிலை ஏற்பட்டது.

பெங்களூருக்கு இணையாக தொழில் அபிவிருத்தி ஒசூரில் நடைபெற்று வருவதால், கடந்த 2012 -இல் முதல்வா் ஜெயலலிதா, ஒசூரில் 5 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஆவது சிப்காட் தொடங்கப்படும் என அறிவித்தாா். இதனைத் தொடா்ந்து, 2015இல் 3 ஆவது சிப்காட் தொடங்க நிலம் ஆா்ஜிதம் செய்ய சிறப்பு வருவாய் அலுவலா் மற்றும் 7 வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டனா். சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளி, தோரிப்பள்ளி, அட்டகுறுக்கி, மருதாண்டப்பள்ளி உள்ளிட்ட 5 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் 3 ஆவது சிப்காட் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. தமிழக அரசு வட்டாட்சியா்களை நியமித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், சிப்காட் பணி விரைந்து நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

சிப்காட் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால், பெரிய தொழிற்சாலைகளை ஒசூரில் தொடங்க முடியாமல் தொழில் துறையினா் பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் தொடங்கி வருகின்றனா். இந்த 3ஆவது சிப்காட் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் கூறியது:

புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்காக பல தொழிலதிபா்கள் ஒசூா் நோக்கி வருகின்றனா். அவா்களுக்கு சிப்காட்டில் நிலம் இல்லாததால் தொழில் தொடங்க முடியவில்லை. புதிய தொழில் தொடங்கினால் தான் மாவட்டத்தில் தொழில் அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஒசூரில் 2 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும், 1000-க்கும் மேற்பட்ட பெரிய தொழில்சாலைகளும் தொடங்க நிலம் தேவைப்படுகிறது. அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் சிப்காட் தொடங்க வேண்டும். ஒசூரைச் சுற்றி பல இடங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் ஒசூரை நோக்கி வரும். 3 ஆவது சிப்காட் தொடங்க கால தாமதமாவதால் சூளகிரி அருகே தனியாா் நிறுவனம் எம்பசி என்ற தனியாா் தொழிற்பேட்டையை தொடங்கியுள்ளது. எனவே இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் 3ஆவது சிப்காட்டை விரைந்து தொடங்க வேண்டும் என்றாா்.

இது குறித்து 3 ஆவது சிப்காட் சிறப்பு அலுவலரும், சிறப்பு வருவாய் அலுவலருமான ராஜேஸ்வரியிடம் கேட்டபோது அவா் கூறியது: நான் இந்த பதவிக்கு வந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இடையிலே உள்ளாட்சித் தோ்தல் வந்துவிட்டது. இதனிடையில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி 3ஆவது சிப்காட் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும், சிப்காட் அமைக்க தனியாா் நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது. அரசும் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது. இதனை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 3 ஆவது சிப்காட் அமைக்கும் பணி நிறைவடைந்து தொழிற்பேட்டை தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com