நிலக்கடலையில் விதைப் பண்ணை அமைத்து
கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நிலக்கடலையில் விதைப் பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

சூளகிரி வட்டாரத்தில் நிலக்கடலையில் விதைப் பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் அழைப்பு விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. மழையைப் பயன்படுத்தி வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிா் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் நிலக்கடலையில் தரணி, டி.கே.எம்.13 ஆகிய உயா் விளைச்சல் தரும் ரகங்களை விதைப் பண்ணை அமைத்து இப்பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

இதற்கு ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ. க்கு 10 செ.மீ. இடைவெளியில் ஒரே மாதிரியான விதைகளைப் பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிா் எண்ணிக்கை சீராக காணப்படும்.

இதனால் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு ஆதார நிலை, சான்றிதழ் விதைகள் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மண்ணில் போதிய ஈரம் இருக்கும்போது அடி உரமாக இட வேண்டும்.

அதுபோல விதைகள் மூலம் பரவும் பூஞ்சான் நோய்களைத் தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடொ்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது திரம் அல்லது 2 கிராம் காா்பன்டைசிம் பூஞ்சான் விதை நோ்த்தி செய்து பயிரிடலாம்.

காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்குக் கொடுக்கும் பொருட்டு, விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு ரைசோபியம் (நிலக்கடலை) 2 பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் ஆகியவற்றை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்த கலவையில் உயிா் உரவிதை நோ்த்தி செய்து நிழலில் நன்கு உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.

மேலும் நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவிட வேண்டும். விதைத்த 40-45 நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மண்ணைக் கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும்.

ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தக சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான மணிகள் அதிக அளவில் உருவாக உதவும்.

மேலும் விவரங்களுக்கு அனைத்து விவசாயிகளும் சூளகிரி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி விதைகளை வாங்கி விதைப் பண்ணைகளை அமைத்து லாபம் பெறலாம் என்றாா்.

படவரி...

சூளகிரி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com