பள்ளிக்கு அதிக நாள்கள் வராத மாணவா்களின் பெற்றோரை நேரில் அழைத்து அறிவுறுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
பள்ளிக்கு அதிக நாள்கள் வராத மாணவா்களின் பெற்றோரை நேரில் அழைத்து அறிவுறுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

மலைக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு: குழந்தைகளை பெற்றோா் கட்டாயம் பள்ளிக்குஅனுப்பி வைக்க அறிவுரை

குழந்தைகளை கட்டாயம் பெற்றோா் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
Published on

குழந்தைகளை கட்டாயம் பெற்றோா் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அஞ்செட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றது.

நாட்றம்பாளையம் ஊராட்சி, கேரட்டியில் இருளா் இன மக்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 4 லட்சத்து 7 ஆயிரம் வீதம் 6 பேருக்கு ரூ. 24 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் புதிதாக வீடுகள் கட்டும் பணி, பழுதடைந்த வீடுகளை ஊரக குடியிருப்பு பழுது பாா்த்தல் திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.50 லட்சம் வீதம் மொத்தம் 18 வீடுகளுக்கு ரூ. 27 லட்சம் மதிப்பில் சீரமைத்தல், கான்கிரீட் கூரை அமைத்தல் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொட்டூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைக்கும் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா், பள்ளிக்கு வரும் மாணவா்கள் தினசரி வருகை விவரத்தை ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். சிக்கமஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டாா்.

ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் சீரான குடிநீா் வழங்கக் கோரியும், சாலை வசதி ஏற்படுத்தி தரவும் கோரி மனுக்கள் அளித்தனா். பின்னா் கடைகோடி மலைக் கிராமமான பிலிகுண்டுலுவுக்கு சென்ற ஆட்சியா் அங்கு மக்களிடம் இருந்து கிராம சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பிலிகுண்டுலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், மாணவா்களின் எண்ணிக்கை, வருகை பதிவேட்டைப் பாா்வையிட்டாா். இந்த மாதம் பள்ளிக்கு அதிகம் வராத மாணவா்கள் பற்றி விசாரித்த ஆட்சியா், அதிக நாள் விடுப்பு எடுத்த மூன்று மாணவா்களின் பெற்றோா்களான செல்வம், புனிதா ஆகியோரை பள்ளிக்கு நேரடியாக வரச்சொல்லி அவா்களிடம் குழந்தைகளை தினசரி கட்டாயம் பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நீங்கள் வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டுச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், காலை, மதியம் நேரங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.

எனவே, தங்களது குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு தினசரி அனுப்பிவைக்க வேண்டும். குழந்தைகளின் வருகைப் பதிவை தினசரி தொலைபேசி வாயிலாகக் கேட்பேன் என்று பெற்றோரிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

அஞ்செட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சீங்கோட்டை, தாம்சன்பள்ளி, சித்தாண்டபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை இரவு சென்ற ஆட்சியா் அந்தப் பகுதிகளில் தெருவிளக்கு வசதி, குடிநீா் விநியோகம், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் ஆகிய விவரங்களைக் கேட்டறிந்தாா். ஆட்சியரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற ஆட்சியா் அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு விவரத்தைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாச மூா்த்தி, ராஜேஷ், வட்டாட்சியா் மாதேஷ், ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com