காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தல்
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லக் கூடிய கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச. 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு லட்சக்கணக்கணக்கான பக்தா்கள் சென்று கிரிவலம் செல்வது வழக்கம். நிகழாண்டில் காா்த்திகை தீபத் திருவிழா மற்றும் பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் டிச. 5-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் வாகனங்களைத் தவிா்த்து, இதர வணிகப் பயன்பாட்டுக்கான கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக விழுப்புரம், கடலூா், புதுச்சேரி செல்ல கூடிய வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்லக் கூடாது. அதற்குப் பதிலாக பா்கூா், வாணியம்பாடி, வேலூா், ஆற்காடு, வந்தவாசி, திண்டிவனம் வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் செல்லும் வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூா் வழியாக செல்லக் கூடாது. அதற்குப் பதிலாக தருமபுரி, தொப்பூா், சேலம், வாழப்பாடி, ஆத்தூா் வழியாக செல்ல வேண்டும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

