கிருஷ்ணகிரி அணை, பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு!
கிருஷ்ணகிரி அணை, பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.
இரண்டாம்போக பாசனத்துக்காக பாரூா் ஏரி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க உத்தரவிட்டாா்.
அதன்படி, பாரூா் ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 20 கனஅடி வீதமும் 5 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட்டு, பிறகு முறைப்பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிட்டும், நான்கு நாள்கள் மதகுகளை மூடிவைத்தும் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், போச்சம்பள்ளி வட்டத்தில் பாரூா், அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விளைநிலங்கள் பாசனவசதி பெறும்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு: கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் இரண்டாவதுபோக பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 120 நாள்கள் என 8.5.2026 வரை தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 75 கனஅடியும், வலதுபுற கால்வாய் மூலம் 76 கனஅடியும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கா் பரப்பளவு நஞ்சை நிலங்கள் பாசனவசதி பெறும்.
விவசாயிகள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் எனவும், நீா்வளத் துறையினருக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்வுகளில், உதவி செயற்பொறியாளா் சபரிநாதன், உதவிப் பொறியாளா்கள் வெங்கடேஷ், பொன்னிவளவன், வட்டாட்சியா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

