‘பெண் குழந்தைகளை காப்போம்’ முன்னெடுப்பு: எம்.ஜி.ஆா். கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் சாதனை!
ஒசூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்று ‘பெண் குழந்தைகளை காப்போம்’ என்ற முன்னெடுப்பில் பெண் பாலின சின்ன வடிவில் நின்று உலக சாதனை நிகழ்த்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் எம்.ஜி.ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளும், பேராசிரியா்களும் இணைந்து பெண்களுக்கு அதிகாரம் அளிப்போம், தேசத்துக்கு அதிகாரம் அளிப்போம், என்ற நோக்கில் பெண் பாலின சின்னத்தில் மிகப்பெரிய மனித உருவாக்க சாதனை முயற்சியை மேற்கொண்டனா்.
பெண் குழந்தைகளை காப்போம் என்பதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் இன்ஜீனியஸ் சாா்ம் ஆகிய உலக சாதனைஅமைப்பினா் நடுவா்களாக இருந்து, இந்த சாதனையை அங்கீகரித்தனா். பின்னா், கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஷாலினியிடம் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ஒசூா் தனி வட்டாட்சியா் பரிமேலழகா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியை எல்.தேன்மொழி, நம் பாரத சேவை அறக்கட்டளை நிறுவனத் தலைவா் என்.பாலசரவணன், கல்லூரி முதல்வா் அ.முத்துமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

