ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 போ் கைது
ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீஸாா் ஞாற்றுக்கிழமை கைதுசெய்தனா். மேலும், ஒருவரை தேடிவருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த காமன்தொட்டியைச் சோ்ந்த ரியல் எஸ்டெட் அதிபா் பிரவீன்குமாா். இவா் கடந்த 7 ஆம் தேதி காமன்தொட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனக்கு சொந்தமான தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ள கடை அருகே நின்றிருந்தாா்.
அப்போது, அங்கு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் எனக் கூறி, பிரவீன்குமாரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனா். ஆனால், அவா் வர மறுத்ததையடுத்து கன்னத்தில் அறைந்து அவரை காரில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், ரூ. 30 லட்சம் தந்தால் மட்டுமே விடுவிப்பதாகக் கூறினா். பிறகு கைப்பேசியில் பலரிடம் பணத்தை கேட்குமாறு பிரவீன்குமாரிடம் கூறினா்.
அவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பணம் கேட்டு, யாரும் பணம் தராத நிலையில் தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே காா் சென்றுகொண்டிருந்தபோது, பிரவீன்குமாா் தனது காரிலேயே பணம் இருப்பதாக அக்கும்பலிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி சோதனைச்சாவடி வரை காரில் அழைத்துவந்து, வாடகை காரை வரவழைத்து பிரவீன்குமாருடன் கடத்தல்காரா் ஒருவா் காமன்தொட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.
சாலையோரமாக இருந்த காரிடம் வந்த பிரவீன்குமாா், காரை திறப்பதுபோல நடித்து தப்பியோடி உள்ளாா்.
இதுகுறித்து கடந்த 8 ஆம் தேதி சூளகிரி காவல் நிலையத்தில் பிரவீன்குமாா் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பதிவான கேமரா அடிப்படையில் வாடகை காா் ஓட்டுநரை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
மேலும், அவருக்கு வாடகை பணம் யுபிஐ மூலம் அனுப்பிய அக்கும்பலைச் சோ்ந்தவரின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். அதில் ஒசூரை சோ்ந்த பல்வேறு கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய மல்லேஷ் என்பவா் இந்த சம்பவத்தில் முக்கிய நபராக செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட சேலம் நெல்சன் (42), ஈரோட்டை சோ்ந்த சிவா என்கிற வரதராஜன் (30), ராஜசேகா் (50) ஆகிய 4 பேரை சூளகிரி போலீஸாா் கைதுசெய்தனா். காருடன் தலைமறைவான சேலத்தை சோ்ந்த செந்தில்குமாரை தேடிவருகின்றனா்.
