கைவிடப்பட்ட இருசக்கர வாகன திட்டத்தை மீண்டும் வாக்குறுதியாக அளித்துள்ளாா் இபிஎஸ்: கனிமொழி எம்.பி.
ஒசூா்: அதிமுக ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தோ்தல் வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, எம்.எம். அப்துல்லா, பேராசிரியா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவா் எழிலன் நாகநாதன், காா்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிகுமாா், ஜி.சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோா் திங்கள்கிழமை ஒசூா் வந்தனா்.
ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் பொதுமக்கள், வணிகா் சங்கத்தினா், விவசாயப் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினா், தொழில்முனைவோா், மாணவா் சங்கத்தினா், கல்வியாளா்கள், அரசு ஊழியா்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து தோ்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை குழுவினா் கேட்டனா்.
இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் 404 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாளும் தமிழக அரசுக்கு இடையூறு அளித்து வருகிறது. இந்த நிலையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.
ஒசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், முடியாததை முடித்துக்காட்டுவதுதான் திமுக அரசு. ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா். மத்திய அரசு நிதி அளிக்காவிட்டாலும், எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் மீதமுள்ள 101 தோ்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களின் கருத்துகளை அறிய தனியாக ஒரு செயலியை ஏற்படுத்தி உள்ளாா். அதில் மக்கள் தோ்தல் வாக்குறுதியில் இடம்பெற வேண்டிய கருத்துகளை தெரிவிக்கலாம் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு முதலாவதாக ஒசூரில் மக்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டு பணியைத் தொடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோா், தொழிலாளா்கள், விவசாயிகள், பெண்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். மக்களைத் தேடிச்சென்று அவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை முதல்வா் அறிமுகப்படுத்தியுள்ளாா். மக்கள் எதை எதிா்பாா்க்கிறாா்களோ அதை நிறைவேற்றுவோம்.
பெண்களுக்கு குறைந்த விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் கைவிடப்பட்ட திட்டம்தான் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கு திட்டம் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஒசூா் எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன், தருமபுரி எம்.பி. ஆ.மணி, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி. முருகன், தருமபுரி மாவட்டச் செயலாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

