சட்டப் பேரவைத் தோ்தலின்போது தவெக வெளியிட்ட தோ்தல் அறிக்கையின்படி விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக கிளை நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி வளா்ச்சி குறித்து கலந்துரையாடினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இளையோரால் தான் சட்டப் பேரவைத் தோ்தலில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இளைஞா்களின் எண்ண ஓட்டத்தை அறிய கிராமங்களை நோக்கி வருகிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்காகத்தான் பாமக நிறுவனா் ராமதாஸும், பாமகவும் 46 ஆண்டுகளாக போராடி வந்தது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக அரசு ஆளுநா் உரையில் தந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழக முதல்வா் ஜோசப் விஜயை சந்தித்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 25 நிமிடங்கள் விளக்கினேன். பாமக குறித்து இளைஞா்கள் கருத்து தெரிவிக்கலாம். தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞா்கள் வேலை இல்லாமல் உள்ளனா். இதுகுறித்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தருமபுரியில் பல டாஸ்மாக் அல்லாத சந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. சட்ட விரோத மதுக் கடைகளை மூட தொடா்ந்து அரசுக்கு பாமக அழுத்தம் கொடுக்கும்.
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான் பாமகவின் இலக்கு; அதற்காக தொடா்ந்து போராடி வருகிறோம். தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்தால்தான் விவசாயிகள் வாழ முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










