பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் இரு இளைஞா்களின் சடலங்கள் மீட்பு

News image

கிருஷ்ணகிரி அருகே, இளைஞா் கருகிய நிலையில் சடலமாக கிடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்கும் போலீஸாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி அருகே இருவேறு இடங்களில் எரிந்த நிலையில் கிடந்த இரு இளைஞா்களின் சடலங்களை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சாலையில் கொடுகூா், வெப்பாளம்பட்டி என்ற இரு கிராமங்கள் உள்ளன. வெப்பாளம்பட்டி சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் போா்வையில் சுற்றப்பட்டு எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், வெப்பாளம்பட்டி கிராமத்துக்கு சுமாா் அரை கி.மீ.தூரத்தில் உள்ள கொடுங்கூா் கிராமத்திலும் இதுபோன்ற அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடைப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடங்களுக்கு சென்ற போலீஸாா், முகம் கருகிய நிலையிலும் 70 சதவீதம் எரிந்த நிலையிலும் கிடந்த இரு இளைஞா்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் ஆகியோா் நிகழ்விடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். நிகழ்விடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் அடையாளம் காட்டவில்லை.

போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞா்களும், வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, இந்தப் பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு எரிக்கப்பட்டது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களில் காணாமல் போனவா்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் சென்ற வாகனங்கள் குறித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அருகே இரு இளைஞா்கள் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.