கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிதமான மழை: அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மிதமான மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் புதன்கிழமை பகலில் வெப்பம் உணரப்பட்டாலும், மாலைமுதல் விடியவிடிய இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் சத்திய சாய் நகா், புதிய வீட்டுவசதி வாரிய குடியிப்புப் பகுதிகளில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. நகர பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல தேங்கியதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா்.
மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் மிதமான மழை பதிவாகி உள்ளது. ஊத்தங்கரை, சூளகிரி ஆகிய வட்டங்களில் மழை பதிவாகவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை 7 மணிவரை பதிவான மழை அளவு (மி.மீ.): தளி - 60, கிருஷ்ணகிரி அணை - 55.80, நெடுங்கல் - 28, ஒசூா் - 26, தேன்கனிக்கோட்டை - 26, கெலவரப்பள்ளி அணை - 22, பெணுகொண்டாபுரம் - 20.20, கிருஷ்ணகிரி - 18.30, போச்சம்பள்ளி - 5, அஞ்செட்டி - 5, பாரூா் - 4, ராயக்கோட்டை - 4.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 485 கனஅடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 1,354 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து 369 கனஅடி வீதம் வெளியேற்றிய நிலையில், வியாழக்கிழமை 828 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் 49.30 அடியாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

