/

பிப்.20, 21 வேலைநிறுத்தத்துக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆதரவு

மத்திய அரசை எதிர்த்து, இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ள  பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:26 pm

தினமணி

மத்திய அரசை எதிர்த்து, இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ள  பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சங்க மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டத் தலைவருமான ஆர்.ரவீந்திரன் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவும், தொழிலாளர் நலச் சட்டங்களை பாதுகாக்கவும், ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை தவிர்க்கவும் வலியுறுத்தி, இடதுசாரி தொழில்சங்கங்கள் பிப்ரவரி 20, 21-ஆம் தேதிகளில் நடத்தவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கமும், அதன் இணைப்பு சங்கங்களும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.

 நாமக்கல், திருச்செங்கோடு நகரங்களின் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கு மேற்கொள்ளவும், நாமக்கல் நகரின் முக்கிய சாலைகளான திருச்சி சாலை, துறையூர் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்திருப்பதால் அந்தச் சாலைகளை அகலப்படுத்திட நெடுஞ்சாலைத் துறை விரைவான நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மற்ற அலுவலகங்களிலும் கழிப்பிடங்கள் மிகமோசமான நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும்.  தமிழக அரசுப் பணியாளர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்யவும், மூவர் குழுவின் அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 முன்னதாக, மாநில வருவாய்த் துறை சங்க நிர்வாகி என்.தம்பிராஜா, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மாநில சம்மேளனச் செயலர் என்.முருகராஜ், மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க முன்னாள் துணைத் தலைவர் சிவசாஸ்திரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 மாவட்டச் செயலர்கள் ஆர்.தமிழ்மணி, மாவட்ட துணைத் தலைவர் சி.விஜயன், கிராமப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் டி.பி.வீராசாமி, சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலச் செயலர் ஜான்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.