மோகனூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

  பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயிலை மோகனூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் மோகனூர் ரயில் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டன

  பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயிலை மோகனூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் மோகனூர் ரயில் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

சேலம், நாமக்கல், கரூர் வழியாக பெங்களூரிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மோகனூர் ரயில் நிலையத்திலும் நிறுத்திச் செல்ல மோகனூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அந்தப் பகுதி மக்கள், தொழில் துறையினர், விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதற்கான அனுமதி வழங்கப்படாததால் பிப்ரவரி 8-ஆம் தேதி வந்த பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயிலை மோகனூரில் மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதானப் பேச்சைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். எனினும், தொடர்ந்து அந்த ரயில் மோகனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாததால் ஆத்திரமடைந்த மோகனூர் பகுதி மக்கள், புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதனடிப்படையில், மோகனூர் பகுதி விவசாயிகள், தொழில் துறையினர், கார், வேன் ஓட்டுநர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை மோகனூர் - பரமத்தி சாலையில் திரண்டனர்.

தொடர்ந்து, மறியலில் ஈடுபடுவதற்கான ரயில் நிலையத்தை நோக்கிச் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபடாமல் ரயில் நிலையம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஜனதாவேலுச்சாமி, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி, முன்னாள் ஒன்றியத் தலைவர் நவலடி மற்றும் திமுக, தேமுதிக, காங்கிரஸ், ஜனதாதள கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தை அறிந்த நாமக்கல் சார்ஆட்சியர் (பொறுப்பு) சூரியபிரகாஷ், சேலம் ரயில்வே முதுநிலைக் கோட்ட மேலாளர் தாமோதரன், மககள் தொடர்பு அலுவலர் வெங்கடேசன் ஆகியோர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்வே உயரதிகாரிகளிடம் பேசி பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயிலை மோகனூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி, மோகனூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com