"பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது'

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார் திமுக துணை பொதுச் செயலர் வி.பி.துரைசாமி.
Updated on
2 min read

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார் திமுக துணை பொதுச் செயலர் வி.பி.துரைசாமி.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, நாமக்கல்லில் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை வகித்தார். திமுக துணை பொதுச் செயலர் வி.பி.துரைசாமி மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆண்டு இதே நாளில் பிரதமர் அறிவித்த பண மதிப்பிழப்பால், கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டன. கூட்டுறவு வங்கிகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டன.
கருப்புப் பணம் ஒழியவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பலன் பெற்றுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.5 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது, தனிமனித வாங்கும் சக்தி குறைந்து விட்டது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எம்.ஷேக்நவீத், கொமதேக மாவட்டச் செயலர் மாதேஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பரமத்தி வேலூரில்... காமராஜர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலரும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தியதைக் கண்டித்தும்,  அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டுகொள்ளாததைக் கண்டித்தும் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வேலூர் நகரச் செயலர் மாரப்பன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்ரவர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர் கபிலர்மலை, திருச்செங்கோடு , பள்ளிபாளையம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் மற்றும் மோகனூர் மேற்கு ஒன்றிய செயலர்கள், மாவட்ட, பேரூர் மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்செங்கோட்டில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ரங்கசாமி, மணிவேல்,கோவிந்தராஜ் ஆகியோர்  கண்டன உரையாற்றினர்.
குமாரபாளையத்தில்... நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகர துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, சிவகுமார், பொருளர் சிவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்டுள்ள விளைவுகள், வேலையிழப்பு, பொருளாதார வளர்ச்சியின்மை குறித்து விளக்கிப் பேசப்பட்டது.  தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் சரவணன், தாமோதரன், பார்த்தசாரதி, தங்கராஜ், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com