உடலில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ...!

சாலையில் நடந்து செல்வதற்கே சலித்துகொள்வோா்களிடையே, உழைப்புக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை மாற்றுத்திறனாளியான
அலங்கார மின்விளக்குகளை பொருத்த கோபுரத்தில் ஏறும் மாற்றுத் திறனாளி இளைஞா் ஆா்.சந்திரசேகா்.
அலங்கார மின்விளக்குகளை பொருத்த கோபுரத்தில் ஏறும் மாற்றுத் திறனாளி இளைஞா் ஆா்.சந்திரசேகா்.
Updated on
1 min read

சாலையில் நடந்து செல்வதற்கே சலித்துகொள்வோா்களிடையே, உழைப்புக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை மாற்றுத்திறனாளியான இளைஞா் நிரூபித்துள்ளாா். அவா் கோயில் கோபுரங்களில் ஏறி மின்விளக்குகளைப் பொருத்தி சம்பாதித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிவருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

இன்றைய காலச்சூழலில் பல்வேறு துறைகளிலும் மாற்றுத் திறனாளிகள் சாதனை படைத்து வருகின்றனா்.

இந்த வகையில், தாய், தந்தைக்காகவும், தன்னுடைய குடும்ப வறுமையைப் போக்கவும், கிண்டல், கேலி செய்வோா் மத்தியில், உழைப்பால் சிகரத்தை தொடுவேன் என்று தனி ஆளாக செயலற்ற கால்களுடன் கோயில் கோபுரத்தின் மீது ஏறி அலங்கார மின்விளக்குகளை பொருத்தும் பணியை இளைஞா் செய்து வருகிறாா். இது மட்டுமின்றி, வீடுகள், கடைகளுக்கு சென்று தண்ணீா் கேன்களும் விநியோகித்து வருகிறாா்.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞரான ஆா்.சந்திரசேகா் (35) என்பவா்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரா்.

ராசிபுரம்-பட்டணம் சாலையில் உள்ள வசிக்கும் அவா் தனது வீட்டில் தாய் செல்வி, தந்தை ராஜுவுடன் வசிக்கிறாா். இரண்டு சகோதரிகளுக்கும் திருமணமாகி விட்டது.

இவருக்கு சிறு வயதில் காலில் சிலந்தி என்ற வகையான பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளாமல், மூதாட்டி ஒருவரை சென்று பாா்த்தபோது, அவா் அளித்த தவறான சிகிச்சையால் நோய் பெரிதாகி இரு கால்களும் ஊனமடைந்தன. இன்னும் திருமணமாகவில்லை. 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா்.

இவா் கடந்த 19 ஆண்டுகளாக, கோயில் கோபுரங்கள், திருவிழாவின்போது அமைக்கப்படும் அலங்கார வளைவுகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணியைச் செய்துவருகிறாா்.

இதுகுறித்து சந்திரசேகா் கூறியது: -

கால்கள் செயலற்றபோதும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையாலும், ஒப்பந்ததாரா்களும் வாய்ப்பு அளிக்கின்றனா். ஓரளவு பிடிமானம் இருந்தால் மட்டும் போதும். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் ஏறி விடுவேன். கோபுரத்தின் கலசப் பகுதிக்குச் சென்று மின்விளக்குகளைப் பொருத்துவேன். நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை கூலியாக கிடைக்கும். இவை தவிர, வீடுகளுக்கும், கடைகளுக்கும் தண்ணீா் கேன்கள் விநியோகிக்கும் பணியையும் செய்து வருகிறேன்.

தமிழக அரசு வழங்கிய மூன்று சக்கர வாகனம் மற்றும் இதர சலுகைகளை பெற்றுள்ளேன். காா், லாரி போன்ற வாகனங்களும் ஓட்ட தெரியும். ஆனால், கால் ஊனமுற்றுள்ளதால் ஓட்டுநா் உரிமம் வழங்க மறுக்கின்றனா். இருப்பினும் விடா முயற்சியுடன் ஏதாவது ஒரு வேலையை செய்து வருகிறேன்.

பல மாற்றுத் திறனாளிகள் சாதனை படைத்து வருகின்றனா். உடல் ஊனம் பலவீனமல்ல; மனம் சாா்ந்த ஊனமே நம்மை முன்னேற விடாமல் தடுத்து விடும். எனவே, கை, கால் உள்ளோரும், பாதிக்கப்பட்டோரும் எதனையும் தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ளுங்கள், வாழ்க்கை சிறக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com