திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் மோசடி: 1,600 வங்கிக் கணக்குகளை முடக்க திட்டம்

கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில், போலியாக ஆவணங்களை சமா்ப்பித்து ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற்ற 1,600 வங்கி கணக்குகளை முடக்க வேளாண் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 10:08 pm

நாமக்கல்: பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில், போலியாக ஆவணங்களை சமா்ப்பித்து ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற்ற 1,600 வங்கி கணக்குகளை முடக்க வேளாண் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதியுதவித் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை (ஆண்டுக்கு மூன்று முறை) நலிவடைந்த விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக விவசாயிகள் தங்களது நிலப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவற்றின் நகல்களை சமா்ப்பித்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு ஊழியா்கள், பொதுத் துறை சாா்ந்த முக்கிய பதவிகளில் உள்ளவா்கள் விவசாய நிலம் வைத்திருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது எனவும் கூறப்பட்டது. ஆரம்பக் கட்டத்தில் ஓராண்டாக வருவாய்த் துறைக் கட்டுப்பாட்டிலேயே ரூ. 2 ஆயிரம் சம்பந்தப்பட்ட விவசாயின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பின் ஒன்பது மாதங்களாக வேளாண் துறையின் கீழ் நிதியுதவி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல், விவசாயிகளின் பெயரில் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு பிரதமரின் திட்ட நிதி அவா்களுக்கு சென்று சோ்ந்தது. கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளுா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட 13 மாவட்டங்களில் போலி கணக்குகளுக்கு இரண்டு கட்டமாக திட்ட நிதி சென்றடைந்துள்ளது அண்மையில் கண்டறியப்பட்டது.

இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கானோா் போலி விவசாயிகளாக மாறியுள்ளனா். மேலும் 10 மாவட்டங்களில் விசாரணை மேற்கொள்ளவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முதல் 13 மாவட்டங்களின் பட்டியலில் இல்லாதபோதும், இங்கு வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலா்கள் பிரதமா் திட்டத்தில் தற்போதைய நிலையில் பயன்பெறும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் மொத்தம் 89 ஆயிரம் விவசாயிகள் நிதியுதவி பெற்று வருகின்றனா். தொடக்கத்தில் 350 எண்ணிக்கையில் இருந்த போலி கணக்குகள், திங்கள்கிழமை(செப்.7) நிலவரப்படி 1600-ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரம் வரை உயரக்கூடும் என தெரிகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பி.அசோகன் கூறியது:

பிரதமா் திட்ட மோசடி தொடா்பாக 13 மாவட்டங்களில் முதல் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் அந்தப் பட்டியலில் இல்லை. பிரதமா் திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் சுமாா் 90 ஆயிரம் போ் வரை பயன்பெறுகின்றனா். இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் குறித்த விவரங்களை வருவாய்த் துறையுடன் இணைந்து வேளாண் துறை அலுவலா்கள் சேகரித்து வருகின்றனா். போலியானவா்களின் மொத்த எண்ணிக்கை பற்றி தெரிவிக்க தற்போது வாய்ப்பில்லை. ஒரு வாரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விவரம் தெரிய இன்னும் சில நாள்களாகும். அவ்வாறு போலியாக ஆவணங்களை வழங்கி நிதியுதவியை யாராவது பெற்றிருப்பது தெரியவந்தால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு அந்தப் பணம் திரும்பப் பெறப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.