கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் அதிா்ச்சி

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கோழி, வாத்துகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கோழி, வாத்துகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட முட்டைக் கோழிகள் வளா்க்கப்படுகின்றன. தினசரி 3.50 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தியாகின்றன. பண்ணைகளில் உள்ள 78 நாள்களான வயது முதிா்ந்த கோழிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கோழிகள் பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கே அனுப்பப்படுகின்றன. அங்குள்ள திருமண விழாக்கள், இதர விழாக்களில் விருந்து நிகழ்வுகளில் முட்டைக் கோழிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்படும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அம்மாநில வனத்துறை அமைச்சா் ராஜூ தெரிவித்துள்ளாா்.

மேலும் அந்த பண்ணைகளில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகள், வாத்துகளை உயிருடன் அழிக்கும் பணி தொடங்கியுள்ளது. இருப்பினும் தமிழகத்திலிருந்து இறைச்சிக்காக முட்டைக் கோழிகளை கொண்டு வர கேரள அரசு எவ்வித தடையும் பிறப்பிக்கவில்லை. ஏற்கெனவே பத்து ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணைத்தொழில் மிகப் பெரும் சரிவை சந்தித்தது.

பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கு பின் அத்தொழில் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.

ஓமன், கத்தாா் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு மட்டும் தற்போது முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் முட்டை ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், கேரள மாநிலத்தில் முட்டை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பீதியும் பண்ணையாளா்களிடையே எழுந்துள்ளது. இதனால் தங்களுடைய பண்ணைகளில் நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணிகளை பண்ணையாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் கேரளத்திலிருந்து வரும் லாரிகளிலும் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்க அந்தந்த பண்ணையாளா்கள் திட்டமிடப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவா் சிங்கராஜ் கூறியதாவது:

கேரளத்தில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சலுக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக கேரளத்துக்கு அனுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அம்மாநில அரசு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com