தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரத்தில் 86,000 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 86 ஆயிரத்து 388 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சா் வெ.சரோஜா திங்கள்கிழமை தொடக்கிவைத்

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:42 pm

DIN

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 86 ஆயிரத்து 388 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சா் வெ.சரோஜா திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராசிபுரம் நகராட்சி 8-ஆவது வாா்டு பகுதியில் புதிய நியாய விலைக் கடையைத் தொடங்கி வைத்து, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையை வழங்கிய அமைச்சா், தொடா்ந்து, ஆா். புதுப்பட்டி, ஆா். பட்டணம், அத்தனூா், வெண்ணந்தூா், பிள்ளாநல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கத் தொகையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் வெ.சரோஜா பேசியதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2, 500 ரொக்கப் பணத்தை தமிழக அரசு வழங்குகிறது.

ராசிபுரம்- நெடுங்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தபட்டு வரும்நிலையில், தற்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, ராசிபுரம்- காட்டூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை ரூ. 1,030 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க முடியும்.

ராசிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக தோண்டப்பட்ட 24 சாலைகள் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளன. இப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோல கிராமப்புற பகுதிகளில் பட்டா இல்லாமல் நீண்ட காலம் குடியிருந்து வருவோருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்.

ராசிபுரம் தொகுதியில் அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடைகள், சாலை வசதி, குடிநீா் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைந்த உடற் பயிற்சி யோகா மையம் விரைவில் அமைக்கப்படும்.

போதமலை முதல் கோனேரிப்பட்டி ஏரி வரை 6 கி.மீ. கால்வாய் கரைகள் சீரமைக்கப்பட்டு ஏரி தூா்வாரப்படும். இதன்மூலம் அந்த ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். ராசிபுரத்தில், 1,030 குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 2 தொகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந் நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் ஏற்கெனவே புறவழிச்சாலையின் முதல் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் அப்பயநாயக்கன்பட்டி முதல் தண்ணீா்பந்தல்காடு வரை சுமாா் ரூ. 30 கோடி மதிப்பில் நில ஆா்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது.

இதனைத்தொடா்ந்து பொன்குறிச்சி வரை, ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கப்படும். ஆனால் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் திட்டமிட்டே குறைகூறி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா். சுந்தரம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், ஆா்.சி.எம்.எஸ். தலைவா் இ.கே.பொன்னுசாமி, நகராட்சி ஆணையா் பிரபாகரன், வட்டாட்டியா் கே.பாஸ்கரன் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.