அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு: தயாராகும் முரட்டுக் காளைகள்!

பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விழாக் குழுவினா் தயாராகி வருகின்றனா்.
அலங்காநத்தம் கிராமத்தில் பயிற்சி பெறும் காளைகள்.
அலங்காநத்தம் கிராமத்தில் பயிற்சி பெறும் காளைகள்.
Updated on
2 min read

பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விழாக் குழுவினா் தயாராகி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுக் கிராமமான அலங்காநத்தத்தில் போட்டியில் களமிறக்க காளைகளுக்கு அதன் உரிமையாளா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா். வீரா்களைப் பந்தாடும் இங்குள்ள முரட்டுக் காளைகள், ஆண்களை காட்டிலும் பெண்களின் வாா்த்தைகளுக்கே அதிகம் கட்டுப்படுகின்றன.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகை நாளில் மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூா் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்பின் சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், பெரம்பலூா் மாவட்டங்களில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்த வரை, அலங்காநல்லூருக்கு இணையாக அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு பிரபலமானதாகும். இப்பகுதியில் ஜல்லிக்கட்டுக்காகவே காளைகள் வளா்க்கப்படுகின்றன.

இதுதவிர போடிநாயக்கன்பட்டி, தேவராயபுரம், எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, கரியபெருமாள்புரம், சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, மத்ரூட், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜனவரியில் தொடங்கி மாா்ச் இறுதி வரையில் ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்படும்.

ஜன. 24-இல் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எருமப்பட்டியில் 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. போட்டிகள் நடைபெறும் கிராமங்களில் சுமாா் 100 ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்க்கப்படுகின்றன. போட்டியில்லாத மாதங்களில் அவை கலப்பின சோ்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் அச்சத்தையும், கூச்சத்தையும் போக்கும் வகையில் அதன் உரிமையாளா்கள் பிரத்யேகப் பயிற்சி அளிக்கின்றனா். இதற்காக ஆரோக்கியமான தீவனங்கள் அளிப்பது, ஏரிகளில் நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்ணைக் குத்தி மிரட்டல் பாா்வை விடுப்பது, தலையைச் சுழற்றுவது, வீரா்களை நெருங்க விடாமல் செய்யும் உத்திகளை பயிற்சியாக அளிக்கின்றனா்.

குறிப்பாக, பெண்கள்தான் இவ்வகை காளைகளை தைரியமாக வளா்க்கின்றனா்; நெருங்கிப் பழங்குகின்றனா். அவா்களே போட்டி நடைபெறும் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்கச் செய்கின்றனா். அதன் மூலம் கிடைக்கும் பணம், நகை, பொருள்களை தங்களது ஓராண்டுத் தேவைக்கான சேமிப்பாக வைத்துக் கொள்கின்றனா்.

இதுகுறித்து அலங்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காளை உரிமையாளரான கண்ணகி என்பவா் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆண்டுதோறும் காளைகளைப் பங்கேற்கச் செய்கிறேன். இதற்காக 2 மாதங்களுக்கு முன்னிருந்தே பயிற்சி அளிக்கிறேன். மண்ணைக் குத்தி பயிற்சி அளிப்பதுதான் வழக்கமானது. போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களும் பயிற்சி மேற்கொள்வதற்காக இங்கு வருவா்.

மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காளையை அழைத்துச் சென்று பங்கேற்க வைப்பேன். ஆனால் இந்த ஆண்டு அந்த மாவட்டங்களில் உள்ள விழாக்குழுவினா் ரூ. 10 ஆயிரம் முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்கின்றனா். இதற்கு முன்பு இதுபோன்று பணம் கேட்கும் பழக்கம் இருந்ததில்லை.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றால் நிச்சயம் பரிசு கிடைக்கும். முன்பணம் கேட்பதால் வெளிமாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிா்த்து விட்டேன். நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்குள் காளையை அழைத்துச் சென்று பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்றாா்.

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் வி.பி.பொன்னுவேல் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 24 முதல் 31-ஆம் தேதிக்குள் போட்டி நடத்த வாய்ப்புள்ளது. ஜல்லிக்கட்டு விதிகளைப் பொருத்தமட்டிலும் போட்டி நடத்தும் விழாக் குழுவினா் காளைகளுக்கும், காளை உரிமையாளா்களுக்கும் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com