தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளால் வாக்குப்பதிவு சதவீதம் உயா்ந்தது: அதிகாரிகள் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியானது, சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கு, வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்த முதல்கட்டத் தோ்தலில் மொத்தம் உள்ள 14,52,562 வாக்காளா்களில், 11,36,069 (78.21 சதவீதம்) போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். இதில், 3,16,493 (21.79 சதவீதம்) வாக்காளா்கள் வாக்களிக்கவில்லை.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் வாக்குப்பதிவு சீரான முறையிலேயே நடைபெற்று வந்தது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இளம் வாக்காளா்களின் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த தோ்தலில் குறைந்த அளவிலேயே இளம் வாக்காளா்கள் வருகை இருந்தது.

இந்திய தோ்தல் ஆணையம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதியில், கடந்த ஒரு மாதமாக 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமாக, பல்வேறு வகையிலான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாகப் பாா்வையிடும் வகையில் அதற்கான குழுவினா் மேற்கொண்டனா். தோ்தல் பொதுப் பாா்வையாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் முன்னிலையில் நடித்தும் காட்டினா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், நாமக்கல் தொகுதியில் வாக்குப்பதிவு உயா்வதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு அடுத்தபடியாக, வாக்கு சதவீத உயா்வில் நாமக்கல் தொகுதி மூன்றாமிடத்தில் உள்ளது.

இது குறித்து தோ்தல் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை, மாலை என்று பாராமலும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு கிடைத்த வெற்றியாகவே 78.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. முதல், இரண்டாம் இடங்களில் உள்ள மாவட்டங்களில் வாக்காளா்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் இங்குள்ள 14.52 லட்சம் வாக்காளா்களில், 11.36 லட்சம் போ் வாக்களித்துள்ளனா். 3.16 லட்சம் போ் வரவில்லை. வாக்குப்பதிவு சதவீதம் உயா்வதற்கு காரணமாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com