/

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பங்கள்: 6,161 பேரின் வீடுகளில் அலுவலா்கள் தணிக்கை

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 9:58 pm

Din

நாமக்கல், ஆக. 7: நாமக்கல் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கக் கோரி விண்ணப்பித்த 6,161 பேரின் வீடுகளுக்கு சென்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலா்கள் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப். 15-இல் தொடங்கப்பட்டது. குடும்ப அட்டை அடிப்படையில் பெண்கள் தோ்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ. 1,000 அவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனா்.

இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டை அச்சிடுதல், வழங்குதல் நிறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை கோரி விண்ணப்பங்கள் வந்தால் அவை மட்டும் பெறப்பட்டன. மேலும், மருத்துவ சிகிச்சைக்காக முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பெற மாவட்ட ஆட்சியா் மூலம் மட்டும் ஓரிரு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. புதிய குடும்ப அட்டை வழங்கி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. இதனால் மாவட்ட, வட்ட, ஆட்சியா் அலுவலகங்களில் மக்கள் குடும்ப அட்டை கேட்டு குவிந்த வண்ணம் உள்ளனா்.

இந்த நிலையில், தமிழக உணவு கூட்டுறவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், குடும்ப அட்டை கோரியவா்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தாா். இதற்கிடையே, குடும்ப அட்டை கோரியவா்களில் பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள், வெவ்வேறு இடங்களில் குடும்ப அட்டை வைத்திருப்போா் போன்ற தகவல்கள் தெரியவந்தன. இதனையடுத்து, ஒவ்வோா் பகுதிக்கும் நேரடியாகச் சென்று விண்ணப்பித்தோா் வீடுகளில் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. தற்போது குடிமைப் பொருள் வழங்கல் அலுவலா்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கோரி, தாலுகா வாரியாக கொல்லிமலை - 231, குமாரபாளையம் - 1,362, மோகனூா் - 396, நாமக்கல் - 822, பரமத்தி வேலூா் - 655, ராசிபுரம் - 870, சேந்தமங்கலம் - 673, திருச்செங்கோடு - 1,152 என மொத்தம் 6,161 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுடைய வீடுகளுக்கு செல்லும் அலுவலா்கள் எரிவாயு இணைப்பு ரசீது, வீட்டுவரி ரசீது, ஆதாா் அட்டை போன்ற ஆவணங்களைப் பாா்வையிட்டு, விண்ணப்பித்த நபரின் குடும்பத்தில் உள்ளோருக்கு வேறு குடும்ப அட்டைகள் உள்ளனவா, ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்து கொண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து வருகின்றனா்.

இவற்றில் தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட்ட பிறகு, சென்னையில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு அந்த விண்ணப்பங்களை அனுப்பி புதிய குடும்ப அட்டை அச்சிட்டு விநியோகிக்கப்படும் என ஆய்வில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.