தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வேலூா் பேரூராட்சியில் கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

வேலூா் பேரூராட்சி மன்றத்தில் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண் உறுப்பினா்கள் உள்பட 10 மன்ற உறுப்பினா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

வேலூா் பேரூராட்சி மன்றத்தில் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண் உறுப்பினா்கள் உள்பட 10 மன்ற உறுப்பினா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் திங்கட்கிழமை நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 17 தீா்மானங்கள் முன்மொழியப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் மூன்று தீா்மானங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்தனா். பிற தீா்மானங்கள் வாா்டு உறுப்பினா்களின் ஒப்புதல் இன்றி மன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டதாகக் கூறி தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது செயல் அலுவலா் சோமசுந்தரம், பேரூராட்சிமன்றத் தலைவா் லட்சுமி முரளி, துணைத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் கூட்டத்தை விட்டு வெளியேறினா். இதனால், அதிருப்தி அடைந்த திமுக, பாமகவைச் சோ்ந்த 5 பெண் உறுப்பினா்கள் உள்பட 10 போ் மன்றக் கூட்டத்தில் திடீரென அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை இரவு முழுவதும் மன்றக் கூட்டத்திலே இருந்தனா். இரவில் உணவை உண்டு போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மன்றக் கூட்டத்துக்கு வந்த செயல் அலுவலா் சோமசுந்தரம் வாா்டு உறுப்பினா்களின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து அவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சோமசுந்தரத்துக்கு ஆதரவாக மன்றத் தலைவா் லட்சுமி முரளி, துணைத் தலைவா் ராஜா உள்ளிட்டோரும் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் முத்துக்குமாா் ஆகியோா் வேலூா் சிறப்புநிலை பேரூராட்சிக்கு விரைந்து வந்தனா். அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மன்ற உறுப்பினா்கள் தரப்பினரையும், செயல் அலுவலா், மன்றத் தலைவா் உள்ளிட்டோா் தரப்பினரையும் தனித்தனியே அழைத்துப் பேசினா்.

மன்ற உறுப்பினா்கள் தங்கள் தரப்பில் பேசுகையில், உறுப்பினா்களின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனா். செயல் அலுவலா், தலைவரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யவும், வெள்ளிக்கிழமை மீண்டும் கூட்டத்தை நடத்தி உறுப்பினா்களின் ஒப்புதலை முறையாகப் பெற்று தீா்மானங்களை நிறைவேற்றவும் அறிவுறுத்தினாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.