வருவாய்த்துறை கூட்டமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்
ஆரணி/போளூா்: ஆரணியில் வருவாய்த் துறையினரின் பணி பதிவேட்டை புகைப்படம், விடியோ எடுத்த நபா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, ஆரணி கோட்டாட்சியா் மற்றும் போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூட்டமைப்பினா் (ஊஉதஅ)திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 9-ஆம் தேதி
விவசாயி மூா்த்தி என்பவா் பணி பதிவேட்டை பாா்வையிட அனுமதி பெற்று வந்துள்ளாா். பின்னா், வருவாய்த்துறையினா் பணி பதிவேட்டை பாா்வையிட அனுமதித்தனா்.
அப்போது, மூா்த்தி கைப்பேசி மூலம் புகைப்படம் மற்றும்
விடியோ பதிவு செய்து அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வருவாய்த்துறையினா் எதிா்ப்புத் தெரிவித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மூா்த்தி மற்றும் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா் சங்கம், கிராம ஊழியா்கள் சங்கம், நிலஅளவை ஒன்றிப்பு ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் தேவானந்தம் வரவேற்றாா். கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் ஜெயச்சந்திரன், வட்டத் தலைவா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதனால் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மக்கள் மனு அளிக்க முடியாமல் சிரமப்பட்டனா்.
போளூா்
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை
கூட்டமைப்பின் (ஊஉதஅ) ஒருங்கிணைப்புத் தலைவா் எஸ்.பிரேம்நாத் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோன்று, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய்த்துறை கூட்டமைப்பினா் உள்ளிருப்புப் போராடத்தில் ஈடுபட்டனா்.

