ராசிபுரம் மன நலம் காப்பகத்தில் நோயாளிகள் இருவா் மோதல்; ஒருவா் கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள மன நலம் காப்பகத்தில் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.
ராசிபுரத்தில் காட்டூா் சாலையில் அணைக்கும் கரங்கள் என்ற பெயரில் அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தின் ஆண்களுக்கான பகுதியில் 67 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மையத்தை ஜாய்சி என்பவா் நடத்தி வருகிறாா்.
இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியைச் சோ்ந்த எம்.தங்கராஜ் (60) என்பவருக்கும், தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
தங்கராஜ் இரும்புக் கம்பியாலும், கைரூல் ஆஸ்மி கட்டையாலும் ஒருவரை ஒருவா் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனா். காப்பக ஊழியா்கள் முயற்சித்தும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த மோதலில் தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், காவல் நிலைய ஆய்வாளா் கே.செல்வராஜ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரூல் ஆஸ்மிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பகத்திலேயே பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளாா்.

