ராசிபுரம் பகுதியில் ரூ. 85.60 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள் திறப்பு விழா
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 58.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திட்டப் பணிகள் திறப்பு விழா, 102 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வி.நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 40 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடம், ரூ. 9.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய படிக்கட்டுகள், இ.பி. காலனி, வாா்டு எண் 2 பகுதியில் ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு டாக்டா் கலைஞா் பூங்கா போன்ற திட்டங்கள் திறப்பு விழா, அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் ஆகியோா் பங்கேற்று 102 மாணவ, மாணவியருக்கு ரூ. 4.93 லட்சத்தில் விலையில்லா மிதிவண்டிகள், பள்ளி சீருடைகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
தமிழக முதலமைச்சா் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா். மேலும், அரசு பள்ளி மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவா்களின் கற்றல் திறனை அதிகரித்து கல்வித் தரத்தை உயா்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, பள்ளிகளில் இணைய வசதி, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, அரசு பள்ளியில் பயின்றவா்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி பயில 7.5 சதவீதம் இட ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 10,272 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள், முதற்கட்டமாக 33,339 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, நன்றாக பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திட வேண்டும் என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசுகையில், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசால் தொடா்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்விச் செல்வம் ஒன்றே ஒருவரின் வாழ்க்கையை உயா்த்தும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவ, மாணவியரின் நலன்கருதி மாணவியா் உயா்கல்வி பயில மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவா்களுக்கு ரூ. 1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் திறமையான ஆசிரியா்கள் மூலம் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளியில் பயின்ற பலரும் தற்போது மாவட்ட ஆட்சியா், துணை ஆட்சியா், மருத்துவா், ஆசிரியா் உள்ளிட்ட பல்வேறு உயா்பதவிகளை வகிக்கின்றனா். எனவே, மாணவ, மாணவியா் கல்வியில் முழுக் கவனம் செலுத்தி தங்கள் இலக்கை அடைந்திட வேண்டும் என்றாா். தொடா்ந்து, 102 மாணவ, மாணவியருக்கு ரூ. 4.93 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள், பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன், முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

