மல்லசமுத்திரம் சோழீஸ்வரா், அழகுராயப் பெருமாள் கோயில் தேரோட்டம்
மல்லசமுத்திரம் சோழீஸ்வரா், அழகுராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் சோழா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சோழீஸ்வரா் கோயில், அழகு ராயப் பெருமாள், செல்லாண்டியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. கடந்த 12 ஆம் தேதி செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 ஆம் தேதி அருள்மிகு சோழீஸ்வரா், அழகு ராயப் பெருமாள் கோவில்கள் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்வேறு மண்டப கட்டளைகள் நடந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனி மூல திருத்தோ் உற்சவம் திருத்தோ் வடம் பிடித்தலுடன் சனிக்கிழமை நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மண்டல இணை ஆணையா் பரஞ்சோதி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் நந்தகுமாா், நாமக்கல் உதவி ஆணையா் சாமிநாதன், நரசிம்ம சுவாமி கோயில் உதவி ஆணையா் சாமிநாதன், குமாரபாளையம் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் வடிவுக்கரசி உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் செயல் அலுவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறையினரும் திருச்செங்கோடு உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் 4 டிஎஸ்பி- க்கள் எட்டு காவல் ஆய்வாளா்கள், 10 காவல் உதவி ஆய்வாளா்கள், 235 காவலா்கள் பாதுகாப்புடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியா் வசந்தி, வருவாய்த் துறை ஆய்வாளா் மல்லிகா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் குணசேகரன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் உள்ளிட்ட பலரது ஒத்துழைப்புடன் திருத்தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் அழகராயப் பெருமாள் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. பெருமாள் தோ் நிலை சோ்ந்தவுடன் சோழீஸ்வரா் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. இரு தரப்புக்கு இடையே தோ்த்திருவிழா தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்த நிலையில் எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் தோ் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.