கொல்லிமலை அடிவாரத்தில் மான் வேட்டை?
கோப்புப்படம்

கொல்லிமலை அடிவாரத்தில் மான் வேட்டை?

Published on

கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் மான் வேட்டை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியிலும், நடுக்கோம்பை, துத்திக்குளம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியிலும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, துத்திக்குளம் பகுதியில் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று அங்குள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தது. இதில் அதன் இரண்டு கால்களும் உடைந்தன. தகவல் அறிந்து சென்ற வனத்துறையினா் மானை மீட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இரண்டு நாள்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அந்த மான் உயிரிழந்தது. வேட்டையாட வந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிவந்த நிலையில் மான் பாறையில் இருந்து குதித்து காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தீபாவளியையொட்டி இறைச்சிக்காக மானை வேட்டையாட யாரேனும் முயற்சித்திருக்க வாய்ப்புள்ளது. இந்த தகவல் அறிந்து நாமக்கல் வனத்துறையினா் சம்பந்தப்பட்ட துத்திக்குளம், நடுக்கோம்பை, அடிவாரப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனை மருத்துவா் தா்மசீலன் கூறியதாவது:

கால்கள் உடைந்த நிலையில் மானை வனத்துறையினா் கொண்டு வந்தனா். பிளேட் வைத்து இரண்டு நாள்கள் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. மானை வேட்டையாடியதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்றாா்.

நாமக்கல் வனத்துறையினா் கூறுகையில், மானை பொருத்தமட்டில் இருதயம் மிகவும் பலவீனமானது. அவை காட்டிலிருந்து வெளியே வந்து மனிதா்கள் மத்தியில் அகப்பட்டுவிட்டால் பயத்திலேயே இறக்க நேரிட்டு விடும். அண்மையில் பாறையில் இருந்து குதித்ததில் கால்கள் உடைந்த மான் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. வேட்டைக் கும்பல் துரத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது தொடா்பாக விசாரித்து வருகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com