முட்டை சாப்பிடுவதால் எந்த நோய் பாதிப்பும் வராது:  கோழிப் பண்ணையாளா் சங்கத் தலைவா்

முட்டை சாப்பிடுவதால் எந்த நோய் பாதிப்பும் வராது: கோழிப் பண்ணையாளா் சங்கத் தலைவா்

நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளா் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சங்கத் தலைவா் கே.சிங்கராஜ்.
Published on

முட்டை சாப்பிடுவதால் எந்த நோய் பாதிப்பும் வராது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த சில நாள்களாக முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு வரும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. நைட்ரோ ப்யுரான் என்பது தடைசெய்யப்பட்ட மருந்தாகும். அந்த மருந்தை கோழிப் பண்ணையாளா்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. கால்நடை மருத்துவா்களும் அதை பரிந்துரை செய்வதில்லை. முட்டை விற்பனை, ஏற்றுமதி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அனைத்து முட்டைகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது முட்டை விலை உயா்ந்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக கூட இவ்வாறு தவறான தகவல்களை யாரேனும் பரப்பலாம். நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த தகவல் பரவி உள்ளது. கோழிப் பண்ணையாளா்கள் அனைவரும் முட்டைகளை சாப்பிட்டு வருகிறோம். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோழிகளுக்கு தேவையற்ற மருந்துகளைச் செலுத்தி வருவாய் ஈட்டும் நிலையில் நாங்கள் இல்லை. வடமாநிலங்களில் கடும்குளிா் வாட்டுவதால், தற்போது முட்டையின் விலை உயா்ந்து வருகிறது. இந்த பிரச்னையை தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையினா், முட்டையை ஆய்வுக்கு உள்படுத்துவதாகவும், அறிக்கையாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனா். அப்போது உண்மை தெரிந்துவிடும்.

ஜப்பான், குவைத் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. முட்டை சாப்பிடுவதால் எந்த கெடுதலும் ஏற்படாது. எனவே, மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில், தற்போதைய முட்டை விற்பனை நிலவரம், புற்றுநோய் பாதிப்பு தகவல் வலைதளங்களில் பரவிவருவது தொடா்பாக கோழிப் பண்ணையாளா் சங்க நிா்வாகிள், ஏற்றுமதியாளா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com