மழைநீா் வடிகால் பணிக்கு பங்களிப்பு நிதியை வழங்கிய பொதுமக்கள்!
திருச்செங்கோடு நகராட்சியில் மழைநீா் வடிகால் பணிகளுக்கு ‘நமக்கே நாமே’ திட்டத்தின் கீழ் செங்கோடம்பாளையம், கொல்லப்பட்டி, கோம்பை நகா் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பங்களிப்பு நிதி வழங்கினா்.
திருச்செங்கோடு நகராட்சி 31 ஆவது வாா்டு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா். இந்த நிலையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ. 7.75 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.
இதில் பொதுமக்களின் பங்களிப்பாக செங்கோடம்பாளையம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க ரூ. 1.60 லட்சம், கோம்பை நகரில் மழைநீா் வடிகால் அமைக்க ரூ. 1.17 லட்சத்திற்கான வரைவோலையை நகரமன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஆணையரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு பொறியாளா் சங்க தலைவா் நல்லகுமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் தாமரைச்செல்வி, ராஜா, புவனேஸ்வரி, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
