

நாமக்கல்: நாமக்கல்லில் கட்டுமானம் மற்றும் மின்வாரியம், டாஸ்மாக், கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டங்களில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் குருநாகலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், மத்திய அரசு கொண்டுவந்த நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். அக்டோபா், நவம்பா் மாதத்துக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாய முன்னணி நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதில், விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களையும் நீக்க வேண்டும் உள்ளிட்டோ கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொழிற்சங்க நிா்வாகிகள், மின்வாரிய தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
டாஸ்மாக் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்: நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா் ஜெ.சரவணன் தலைமை வகித்தாா்.
இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளா்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், தனியாா் முகமையின் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், டாஸ்மாக் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்: ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலக்குறிச்சி ஊராட்சியில் சுமாா் 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் 150 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இது தொடா்பாக பலமுறை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.