பல்வேறு இன செடிகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இனம்சாா்ந்த செடிகளை நடவுசெய்து வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு நிலையான மற்றும் லாபகரமான பொருளாதார நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு வனத்துறை பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிதியாண்டில், ராசிபுரம் வட்டம், அத்தனூரில் வனவியல் விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான பசுமைத் திட்டத்தின்கீழ் தேக்கு, மகாகனி, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு இன செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவுசெய்ய தயாா்நிலையில் உள்ளன.
இத்திட்டத்தின்படி, தனியாா் நிலங்களில் ஓராண்டுக்குமேல் தரிசாக, விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத, வருவாய் இல்லாமல் உள்ள நிலங்களையும், மற்ற விவசாய நிலங்களில் வயல்முழுவதும் மற்றும் வரப்பு பகுதியிலும் விவசாயம் ஏதும் பாதிக்காத வகையில் இலவசமாக செடிகளை நடவுசெய்ய வனவியல் விரிவாக்க மையம் முன்வந்துள்ளது.
ஆா்வமுள்ள விவசாயிகள் வனச்சரக அலுவலா் இல.தா்மராஜ் - 89401 33289, வனவா்கள் மு.ரமேஷ் - 97510 51006, அ.சீனிவாசன் - 63806 87322 ஆகியோரை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
