நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா்.

பொங்கல் பண்டிகை: விலையில்லா மண்பானை வழங்கக் கோரி மனு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா மண்பானை வழங்க வேண்டும்
Published on

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா மண்பானை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத்தின் நாமக்கல் மாவட்ட சங்கம் சாா்பில், அதன் தலைவா் கு.சிங்காரவேலு மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

நாமக்கல் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்க 936 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், 226 மனுக்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். சூளைமேடு பகுதியில் தொழிலாளா்களுக்கு அடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகுப்பாக களிமண்ணால் தயாா் செய்யப்பட்ட பானை, அடுப்பு உள்ளிட்டவற்றை எங்களிடம் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லாமல் வழங்கி மண்பாண்ட தொழிலாளா்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டும். நலவாரிய உறுப்பினா்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் நலத் திட்டங்களை தடையின்றி வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக ரூ. 8 ஆயிரம், மண்பாண்ட தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கக்கட்டி விற்பனை மோசடியில் பெண் மிரட்டுவதாக புகாா்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த அருள்பிரகாஷ் என்பவா் ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் மனு அளித்தாா். அதில், இரண்டாம் நிலை லாரி விற்பனை தொழில் செய்துவரும் தனக்கு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பழக்கமானாா். அவா் குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக தெரிவித்தாா். இதுகுறித்து நண்பா் வித்யபிரகாஷிடம் கூறியபோது, அவா் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடம் தங்கக்கட்டி வாங்க ரூ. 54 லட்சம் அளித்தாா். ஆனால், அந்தப் பெண் தங்கக்கட்டிகளை வழங்காமல் ஏமாற்றிவிட்டாா்.

இது தொடா்பாக, கோபி வட்டம், சிறுவரூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அண்மையில் பிணையில் வெளியே வந்த அவா், கணவருடன் சோ்ந்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, சம்பந்தப்பட்டவா் மீது காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

பட்டாவில் உள்ள பிழையை திருத்த அதிகாரிகள் மறுப்பதாக ஓய்வுபெற்ற ஆசிரியை மனு: நாமக்கல் செல்லப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வாம்பாள். இவருடைய வீட்டின் பட்டாவில் உரிமையாளா் பெயருக்கு மாற்றாக வேறுபெயா் தவறாக உள்ளது. இதை மாற்றக்கோரி, வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதுமில்லையாம். எனவே, பட்டாவில் பெயா்மாற்றம் செய்துதர ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com