உதவித்தொகையை உயா்த்தக் கோரி போராட்டம்: 185 மாற்றுத்திறனாளிகள் கைது
மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 185 மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ.நாகேஸ்வரி, பொருளாளா் கே.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விலைவாசி உயா்வுக்கு ஏற்ப மற்ற மாநிலங்களைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாகவும், அதிகம் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும், படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரமாகவும் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினாா். ஆனால், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா். அதன்பிறகு, 70 பெண்கள் உள்பட 185 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
