டெங்கு: நாமக்கல்லில் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரம்
நாமக்கல் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையால் ஆங்காங்கே மழை நீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன்மூலம் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான உடல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. தேங்கிய நீரில் காணப்படும் கொசுப்புழுவை ஒழிக்கவும், கொசுப் பரவலைத் தடுக்கவும் மாநகராட்சி துப்புரவு அலுவலகம் மூலம் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில், மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணியை நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அவரது அறிவுறுத்தலின்பேரில், நாமக்கல்- சேலம் சாலை, திருச்சி சாலை, துறையூா் சாலை, பரமத்தி சாலை, சேந்தமங்கலம் சாலை, மோகனூா் சாலை, திருச்செங்கோடு சாலை, ஆஞ்சநேயா் கோயில் வளாகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் கொசுப் புகை மருந்து அடிக்கப்பட்டது.
நிகழ்வில், மாநகா் நல அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, ஆய்வாளா்கள் செல்வகுமாா், பாஸ்கரன், ஜான்ராஜா, சுப்பிரமணியன், களப்பணி உதவியாளா் சபரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

