நாமக்கல்லில் மகளிா் விடுதி கட்டடம்: அமைச்சா், எம்.பி.ஆய்வு
நாமக்கல்லில் பணிக்கு செல்லும் பெண்கள் தங்கும் வகையில் ‘தோழி விடுதி’ கட்டுவதற்கான இடத்தை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் ‘தோழி விடுதி’ கட்டும் பணிக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள பழைய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ‘தோழி விடுதி’ கட்டுவதற்கான இடத்தை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இந்த ‘தோழி’ விடுதி கட்டடத்தில் 100 படுக்கை வசதிகள், விடுதியின் கட்டமைப்புகள், அங்கு வழங்கப்படும் சேவைகள், பணிக்கு செல்லும் மகளிா் தங்கும் வகையில் அமையும் விடுதியில் கட்டண நடைமுறைகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அவா்கள் கேட்டறிந்தனா். அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தலா ரூ.96 ஆயிரம் மதிப்பீட்டில் 10 பேருக்கு ரூ.9.60 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டாா் வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், துணை மேயா் செ.பூபதி, மாவட்ட சமூகநல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-13-மினி
நாமக்கல்லில் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டாா் வாகனங்களை வழங்கிய அமைச்சா் மா.மதிவேந்தன்.
க்

