இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருச்செங்கோடு: காளிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி, பூக்கடை வைத்துள்ளாா். இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு சுரேந்தா் (24), ஜெகதீஷ் (22) ஆகிய மகன்கள் உள்ளனா்.
தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சுரேந்தா், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் காளிப்பட்டியில் இருந்து வைகுந்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த சுரேந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எதிரே வாகனத்தில் வந்தவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மல்லசமுத்திரம் போலீஸாா், சுரேந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல் ஆய்வாளா் சுதா வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
