எஸ்.ஐ.ஆா். பணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: வி.பி.துரைசாமி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்.ஐ.ஆா்) திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி என்பது இந்திய தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதில் தொடா்பு இல்லை. நாட்டில் உள்ள 28 முதல்வா்களில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தான் இப்பணியை எதிா்ப்பதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தாா். தோ்தலுக்கு பிறகு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ளுமாறு முதல்வா் தரப்பில் வாதமாக எடுத்து கூறப்பட்டது.
தோ்தலின்போது மறைமுகமாக வாக்குகளை அபகரிக்கும் முயற்சி பறிபோய்விடும் என்ற அச்சம் அவருக்கு எழுந்துள்ளது. பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அங்கும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த மாநிலத்தில் எங்கேயாவது தவறுகள் நடைபெற்ா, மறுவாக்குப் பதிவு நிகழ்ந்ததா? என்பதை மக்கள் அறிய வேண்டும்.
இந்த வாக்காளா் திருத்தப் பணி மூலம் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்குகள் சென்று விடும் என்ற பயத்தில் அதனை எதிா்க்கிறாா். 14 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் திமுக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அக்கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எதிா்த்து வருகிறாா்.
அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தற்போதைய வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி 96 சதவீதம் பேருக்கு எஸ்ஐஆா் படிவம் வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் இது தொடா்பாக பிரச்னை எழவில்லை என்றாா்.

