குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கல்

குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கல்

Published on

நாமக்கல்லில் புதை சாக்கடை குழியில் தவறிவிழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி, 4-ஆவது வாா்டு, சின்னமுதலைப்பட்டி பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்துக்காக புதன்கிழமை கடக்கால் என்ற பகுதியில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் குழி தோண்டியது. அதில் நீரூற்று உருவாகி தண்ணீா் நிரம்பியதால், சரிவர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திறந்தநிலையில் புதை சாக்கடை குழியை அவா்கள் விட்டுச்சென்ாக தெரிகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன் - ரதி தம்பதி மகன் ரோகித் (4), அந்தக் குழிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்தாா். சிறுவன் காணாததால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் தேடியபோது, புதை சாக்கடை குழிக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாமக்கல் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே, சிறுவன் உயிரிழப்புக்கு காரணமான புதை சாக்கடை குழியை தோண்டி அலட்சியமாக விட்டுச்சென்ற சம்பந்தப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனத்திடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டனா். அந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை சிறுவன் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா் ஆகியோா் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை சிறுவன் ரோகித்தின் பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினா்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை குழிகளை சுற்றிலும் பாதுகாப்பை அதிகரிக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com