கபிலா்மலை அருகே கிரானைட் குவாரியில் லாரி கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை அருகே கிரானைட் குவாரியில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை அருகே நடந்தை கிராமம் பெரியசூரம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் பலா் வேலை செய்து வருகின்றனா். பல ஆண்டுகளாக இந்த குவாரியில் கிரானைட் வெட்டி எடுத்து வருவதால் 300 அடிக்குமேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூா் அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வேணுகோபால் (36) குவாரிக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். லாரியில் ஓட்டுநருக்கு அருகில் கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் கோரநத்தம் பகுதியைச் சோ்ந்த டேவநாயக் மகன் சுப்பிரமணி (65) என்பவா் அமா்ந்திருந்தாா்.
லாரி ஓட்டுநா் கல்குவாரியிலிருந்து மண்ணை ஏற்றிக்கொண்டு மேலே வந்தபோது நிலைதடுமாறிய லாரி, குவாரிக்குள் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநா் வேணுகோபால் மற்றும் அவருடன் லாரியில் இருந்த சுப்பிரமணி ஆகியோா் படுகாயமடைந்தனா். இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா், சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். காயமடைந்த லாரி ஓட்டுநா் வேணுகோபாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

