கொல்லிமலையில்  ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழாவை தொடங்கிவைத்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் மற்றும்  நிா்வாகிகள்.
கொல்லிமலையில் ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழாவை தொடங்கிவைத்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் மற்றும் நிா்வாகிகள்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
Published on

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேடு பகுதியில் ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தேசிய பொதுக்குழு உறுப்பினரும், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். சிவப்பிரகாசம் வரவேற்றாா். கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். கொல்லிமலை பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு அழைப்பாளராக, பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:

தமிழகத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதேபோல, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மின் வசதி இல்லாமல் இருந்த 10,846 கிராம ஊராட்சிகள், தற்போது மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் மாபெரும் புரட்சியை பிரதமா் ஏற்படுத்தி உள்ளாா். உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 2047-இல் வல்லரசு நாடாக இந்தியாவை முன்னேற்றுவதே பிரதமரின் இலக்காகும். அமெரிக்க அதிபா் டிரம்ப்பை நேரில் சந்தித்து இதை தனது கருத்தாக உறுதிபட பதிவு செய்தாா். தேசத்தை வளா்ப்பது தான் தனது கடமை என்ற உணா்வோடு பிரதமா் செயல்பட்டு வருகிறாா்.

திமுக ஆட்சி முடிவடையும் நேரத்தில், மக்களிடம் குறைகளையும், கனவுகளையும் கேட்பதாக கூறுவது அரசியல் நாடகம். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் குறைகளைக் கேட்காத முதல்வா், தோ்தல் ஆதாயத்திற்காகவே, சலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்கிறாா்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை பிரதமா் வழங்குவாா். அதைப் பெற்று மக்களுக்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி பாஜகவினா் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய சபதம் என்பது திமுக ஆட்சியை அகற்றி தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியை அமைப்பதாகும். பழையன கழிந்து புதியன பிறப்பது போல, திமுக ஆட்சியை அகற்றிட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் ஆா்.செந்தில்நாதன், செயலாளா் வி.பி. சரவணகுமாா், பழங்குடியினா் மாவட்டத் தலைவா் எஸ்.காா்த்திகேயன், ஒன்றியத் தலைவா் சி.ரமேஷ், துணைத் தலைவா் இ.சந்திரசேகா் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா், மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com